ரிஷப ராசியினர், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவித்து வரும் கஷ்டங்களே அதற்கு முக்கிய காரணம்.
பொதுவாக, ரிஷப ராசிக்கு ஏழரை சனியை விட, ஆறு, ஏழு மற்றும் எட்டாம் இடங்களில் வரும் கோச்சார சனியே, அதிக பாதிப்புகளை தருவார்.
அதன்படி, கோச்சார சனி துலாம் ராசிக்கு வந்த காலகட்டத்தில் இருந்தே, ரிஷப ராசிக்கு கஷ்டங்கள் ஆரம்பம் ஆகிவிட்டன.
ஆனால், ஆறாம் இடமான துலாம் ராசிக்கு வரும் சனி, அள்ளிக்கொடுப்பார் என்றே பலரும் பலன் கூறினார்கள்.
உண்மை அதுவல்ல. ரிஷப ராசிக்கு ஒன்பது மற்றும் பத்தாம் இடங்களுக்கு உரிய தர்ம கர்மாதிபதியான சனி, ஆறாம் இடத்தில் மறையும்போது, தொழிலுக்கும், வருமானத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி முடக்கி விட்டார் என்பதே உண்மை.
அடுத்து, ஏழாம் இடமான விருச்சிகத்தில் கண்ட சனியாகவும், எட்டாம் இடமான தனுசில் அஷ்டம சனியாகவும் இருந்து ரிஷப ராசிக்காரர்களை மிகவும் நோகடித்து விட்டார்.
இதுதான், ரிஷப ராசிக்காரர்களின் தொடர்ந்து அனுபவித்து வரும் கஷ்டங்களுக்கு முக்கிய காரணம். இதை, யாரும் தெளிவாக கூறவில்லை.
ஆனால், தற்போது கும்பத்திற்கு வந்துள்ள சனி பகவான், உங்களுடைய கஷ்டங்களுக்கு கொஞ்சம், கொஞ்சமாக முற்றுப்புள்ளி வைத்து, விரைவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவார். அதனால், நம்பிக்கை இழக்க கூடாது.
ஒன்பதாம் இடமான மகரம் ரிஷபத்திற்கு பாதக ஸ்தானமாக இருந்தாலும், அது சனி பகவானுக்கு சொந்த வீடு, அத்துடன், ரிஷப ராசிக்கு சனியே யோக காரகன். அதனால், நீங்கள் விரைவில் நல்ல மாற்றத்தை சந்திப்பீர்கள். கவலை வேண்டாம்.
இனி, ரிஷப ராசிக்கான பரிகாரங்களை பார்ப்போம்.
ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது ராசி ரிஷபம். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன்.
ரிஷபத்திற்கு புதன் மற்றும் சனியே நட்பு கிரகங்கள். குரு பகை கிரகமாகும்.
சூரியன் நான்காம் அதிபதியாக இருந்தாலும் சுப பலன்களை தருவதில்லை. பாதகதிபதியாக இருந்தாலும், சனியே யோகத்தை தரக்கூடியவர்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை ரிஷபத்திற்கு நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, சுக்கிரனுக்கு உரிய பிங்க், புதனுக்கு உரிய பச்சை, சனிக்கு உரிய நீலம் ஆகிய நிறங்களில் உடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.
அதேபோல், குருவுக்கு உரிய மஞ்சள், சூரியனுக்கு உரிய ஆரஞ்சு நிறங்கள் கொண்ட ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்கலாம்.
தடைகள் மற்றும் இடையூறுகளை அகற்ற, மஞ்சள் நிறத்தில் உள்ள அரையடி நீல ரிப்பனை எடுத்துக்கொண்டு, வியாழக்கிழமைகளில் அதை கத்தரிக்கோலால் துண்டு, துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், கொண்டை கடலையை வியாழக்கிழமை அன்று, ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள், குருவின் காரகத்துவம் நிறைந்த கோயில்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
ரிஷப ராசி சுக்கிரன் ஆட்சி பெறும் வீடு. அதேபோல், சந்திரன் உச்சம் பெறும் வீடு. அதனால், சந்திரன் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நீர், அரிசி, மற்றும் ஆடைகளுக்கு குறைவில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல், அழகு, ஆடம்பரம் மற்றும் செல்வ செழிப்புக்கு காரகத்துவம் வகிக்கும் சுக்கிரனுக்கு, ரிஷபம் சொந்த வீடு என்பதால், முடிந்தவரை வாசனை திரவியங்களை பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
இதுதவிர, சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப்பில், ரிஷப ராசிக்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை பார்ப்போம்.
கணவன் மனைவிக்கு இடையே உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண தத்தாத்ரேயரை வழிபட வேண்டும்.
அதேபோல், ஏதாவது ஒரு ஏழைக்கு பசு மாடு வாங்கி தானமாக வழங்க வேண்டும்.
அடுத்து யார் பிச்சை கேட்டாலும், இல்லை என்று சொல்லாமல் முடிந்த வரை தானம் வழங்க வேண்டும் என்றும் லால் கிதாப் கூறுகிறது.
அடுத்து, ரிஷப லக்னம் அல்லது ரிஷப ராசிக்காரர்கள், சுக்கிரனுக்கு உரிய வைரம், புதனுக்குரிய மரகதம், சனிக்குரிய நீலக்கல் ஆகியவற்றை அணியலாம்.
எனினும், ராசிக்கற்கள் அணியும்போது அனுபவம் நிறைந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களையே அணிய வேண்டும்.
அதற்கு முன், மனதில் உள்ள நெகடிவ் சிந்தனைகளை அகற்றி, பாசிடிவ் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக