ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள ஒன்பதாவது ராசி தனுசு. தனுசு ராசியின் அதிபதி குரு.
தனுசு ராசிக்கு செவ்வாய், சூரியன் ஆகியவை நட்பு கிரகங்கள். புதன் மற்றும் சுக்கிரன் பகை கிரகங்கள்.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, செவ்வாய்க்கு உரிய சிவப்பு, சூரியனுக்கு உரிய ஆரஞ்சு நிறங்களில் ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.
சுக்கிரனுக்கு உரிய பிங்க், புதனுக்குரிய பச்சை நிறங்களில் உள்ள ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்க வேண்டும்.
.தடைகள் மற்றும் இடையூறுகள் அகல, பச்சை மற்றும் பிங்க் நிறத்தில் உள்ள அரையடி நீள ரிப்பன்களை எடுத்து, புதன் அல்லது வெள்ளிக்கிழமைகளில், கத்தரிக்கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், பச்சை பயறு மற்றும் மொச்சை ஆகியவற்றை கொஞ்சம் எடுத்து, புதன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மேலும், புதன் மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த கோயில்களுக்கு அடிக்கடி செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
வடஇந்தியாவின் மிகப்பழமையான லால் கிதாப் என்ற சிவப்பு நூல் தனுசு ராசிக்கு கூறும் பரிகாரங்கள் சிலவற்றை பார்ப்போம்.
செம்பு நாணயங்களை 43 நாட்கள் தொடர்ந்து ஓடும் நீரில் விட நல்ல பலன்கள் கிடைக்கும்.
தந்தையின் படுக்கை மற்றும் ஆடைகளை பாதுகாத்து வைத்திருப்பது அதிர்ஷ்டத்தை தரும்.
பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதை தானம் செய்வது நல்லது.
திங்கள் கிழமைகளில் கோவில்களுக்கு நெய், தயிர் அல்லது கற்பூரம் வாங்கி தருவது நல்லது.
வீட்டின் முன் பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வைப்பது நல்லது. அரசமரத்தை சுற்றி வருதல் நல்ல யோகத்தை தரும்.
வாழ்வில் ஒரு முறையாவது, ஹரிதுவார் சென்று வழிபாடு செய்வது நல்லது.
அடுத்து தனுசு ராசி மற்றும் லக்னத்திற்கு, குருவுக்கு உரிய கனக புஷ்பராகம், செவ்வாய்க்கு உரிய பவழம், சூரியனுக்கு உரிய மாணிக்கம் ஆகியவை உகந்த ரத்தினங்கள் ஆகும்.
ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே அணிய வேண்டும். அதுவும் குறை இல்லாத ரத்தினங்களையே அணிய வேண்டும்.
அவரவருக்கு நடக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரக நிலைகள் காரணமாக, பலன்கள் சாதகமாகவே அல்லது பாதகமாகவோ இருக்கலாம்.
இருந்தாலும், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை தரும். அதுவே, விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக