ராசி மண்டலத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது ராசி மிதுனம். மிதுன ராசிக்கு அதிபதி புதன்.
புதனுக்கு, சுக்கிரன் மற்றும் சனி நட்பு கிரகங்கள். குருவும் செவ்வாயும் பகை கிரகங்கள். மற்ற கிரகங்கள் சமநிலையில் உள்ளன.
ஆகவே, நட்பு கிரகங்களின் காரகத்துவம் உள்ள பொருட்கள், நிறங்கள், இடங்கள் போன்றவை மிதுனத்திற்கு நன்மை பயக்கும். பகை கிரகங்களின் காரகத்துவங்கள் நன்மை அளிக்காது.
அதன்படி, புதனுக்கு உரிய பச்சை, சுக்கிரனுக்கு உரிய பிங்க், சனிக்கு உரிய நீல நிறங்களில் ஆடை மற்றும் கைக்குட்டைகளை பயன்படுத்தலாம்.
அதேபோல், மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆடைகள் மற்றும் கைக்குட்டைகளை தவிர்க்க வேண்டும்.
தடைகள் மற்றும் இடையூறுகளை அகற்ற, சிவப்பு நிறம் மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள அரையடி நீல ரிப்பனை எடுத்துக்கொண்டு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அதை கத்தரிக்கோலால் துண்டு, துண்டாக வெட்டிப் போடலாம்.
அதேபோல், துவரை மற்றும் கொண்டை கடலையை, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை அன்று, ஒரு கல்லில் வைத்து இடித்து போடலாம்.
மிதுனம் என்பது ஆண்-பெண் சங்கமத்தை குறிக்கும் வீடு என்பதால், சிறு பறவைகள், அணில் போன்ற சிறு உயிரினங்கள், உங்கள் மனையில் தண்ணீர் மற்றும் உணவுகள் அருந்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கலாம்.
வீட்டில் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை வாங்கிப்போட்டும், ஊஞ்சல் அமைத்தும் அண்டை வீட்டு குழந்தைகளும் விளையாடுவதை கண்டு ரசிப்பது நல்ல யோகத்தை தரும்.
ராசியின் அதிபதி புதன், பச்சை நிறத்தை குறிப்பதால், வீட்டில் செடி கொடிகளை முடிந்த அளவுக்கு வளர்ப்பது நல்லது. அதை நாடி வரும் பறவைகள் மற்றும் சிறு உயிரினங்களின் வாழ்த்து உங்களுக்கு கிடைக்கும்.
இவை அனைத்தும் அனுபவம் நிறைந்த ஜோதிடர்கள் கண்டறிந்த எளிய பரிகார முறைகள் ஆகும்.
அதேபோல், மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள், குருவின் ஆதிக்கம் கோயில்களுக்கு செல்வதை தவிர்க்கலாம்.
இதுதவிர, சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப்பில், மிதுன ராசிக்கு சொல்லப்பட்டுள்ள பரிகாரங்களை பார்ப்போம்.
வீட்டில் மணி பிளான்ட் வளர்க்க கூடாது என்று லால் கிதாப் கூறுகிறது. மணி பிளான்ட் என்பது மிதுன ராசிக்கு பதகாதிபதியான குருவின் காரகத்துவம் கொண்டுள்ளதால், அப்படிக் கூறி இருக்கலாம்.
அடுத்து, மிதுன ராசி அல்லது லக்னத்திற்கு, புதனுக்கு உரிய மரகதம், சுக்கிரனுக்கு உரிய வைரம், சனிக்கு உரிய நீலக்கல் ஆகியவை உகந்த ரத்தினங்கள் ஆகும்.
ராசிக்கற்களை அணியும்போது, அனுபவம் நிறைந்த ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, குறை இல்லாத ரத்தினங்களை தேர்வு செய்து அணிய வேண்டும்.
அனைத்து ராசிகளும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் தன்மைகள் கொண்டவையே. அதனால், பாசிடிவ் தன்மைகளை அதிகரிப்பதும், நெகடிவ் தன்மைகளை குறைப்பதும், உங்கள் மனதை பக்குவப்படுத்தும்.
எனவே, மனதில் உள்ள எதிர்மறை சிந்தனைகளை அகற்றி, பாசிடிவ் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் விதியை மதியால் வெல்லும் ரகசியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக